" விதிமுறைகள் " எனும் சிலந்தி வலை

                 

                                                                           இன்றைக்கு சமூக வலைதளங்களிலும் ஏனைய ஊடகத்திலும் பெரிதாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் , ஒரு குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியின் விதிமுறைகளை கொண்டு அச்சிடப்பட்ட ஒரு நகலின் புகைப்படம் உலவுவது தான். அது அந்த குறிப்பிட்ட கல்லூரியின் விதிமுறைகளின் நகல் இல்லை என்று சொல்லப்பட்டாலும் , அங்கே பயிலும் மாணவர்கள் வேதனையோடு தாங்கள் அவ்வாறு தான் அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு  அந்த கல்லூரியில் வாழ்கிறோம் என கதறுகிறார்கள். அவற்றில் சிலவற்றை பட்டியிலிட்டு அதற்கு மாணவர்கள் வாயிலாக பதில் வந்தால் எப்படி இருக்கும் என ஒரு சிறு கற்பனை.   

மாணவர்கள் மாணவிகளிடம் பேசக்கூடாது

அப்புறம் என்னதுக்கு கோ எஜுகேஷன் நடத்துறிங்க ? இந்த மாதிரி மத்தவங்களோட சகஜமா பழக முடியாததுனால தான் ஒரு இன்டர்வியூ, குரூப் டிஸ்கசன்ல வெட்கப்பட்டு பேச முடியாம திறமை இருந்தும் நாங்க வெளியேறுகிறோம்.

மொபைல் போன் சிம் கார்ட் லேப்டாப் பென்டிரைவ் பயன்படுத்தகூடாது

நாங்க என்ன கற்காலத்துலயா இருக்கோம்? ஸ்பெஷல் கிளாசுனு சாயங்காலம் 7 மணி வரைக்கும் வச்சா, ஒரு ஆத்திர அவசரத்துக்கு பெத்தவங்களுக்கு போன் பண்ணனும்னா போன் தேவை இல்லையா ?  இல்ல... எங்களோட ப்ராஜக்ட்காக லேப்டாப், பென்டிரைவ் போன்ற விஷயங்கள் பயன்படுத்தறது தப்பா ?

நின்றால் பைன் உட்கார்ந்தால் பைன்

 இன்னொரு காலேஜ் கட்டனும்ல !   

கல்லூரி மற்றும் விடுதியில் கொசுத்தொல்லை வருவதால் மேலும் நாய், பூனை போன்ற மிருகங்கள் கல்லூரிக்குள்ளே வருவதால் மாணவர்கள் யாரும் அசைவ உணவு எடுத்துக்கொண்டு வரக்கூடாது 

காட்டு நடுவுல காலேஜ் வச்சா நாய் பூனை வராம ??

கல்லூரி பேருந்தில் மட்டுமே வர வேண்டும். இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் கொண்டுவரகூடாது

 அப்புறம் நான் காட்டு நடுவுல இருக்க காலேஜுக்கு பறந்து தான் வரணும் !


 என நீண்டுக்கொண்டே செல்கிறது  ! இன்றைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியம் அல்லாத மற்றும் தேவையில்லாத விதிமுறைகளை பிறப்பித்து மாணவர்களை துன்புறுத்துகிறார்கள். வீட்டு அருகே சிறு நிலமும் கையில் பணமும் அரசியல் செல்வாக்கும் இருந்தால் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் பொறியில் கல்லூரி தொடங்கி விடலாம் போலும். விளைவு, இன்று 450 மேற்ப்பட்ட தரமற்ற பொறியில் கல்லூரிகள்.



அப்படி தொடங்கப்பட்ட கல்லூரிகளில் சரியான கட்டமைப்பு வசதியும் ஆய்வுக்கூட வசதியும் இருக்காது . மேலும் திறமையான ஆசிரியர்களும் இல்லை . லஞ்சம் கொடுத்து கல்லூரிக்கு செர்டிபைட் வாங்கி விட்டு, தன் ஆசைகேற்ப கல்லூரியை நடத்தினால் அதில் பயிலும் மாணவர்களுக்கு பொறியில் படிப்பிற்கான நோக்கம் அடையப்படுமா ?
இது மேலே வித்தியாசமாய் விதிமுறைகளை பிறப்பித்த கல்லூரி என கூறப்படும் கல்லுரிக்கு மட்டும் அல்ல , தமிழ்நாட்டில் தன்னுடைய கல்லூரியின் ரேங்க் முன்னேற வேண்டும், மாணவர்கள் தம்மிடம் சேர்ந்து ,தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து இத்தைகைய விதிமுறைகளை பின் பற்றினால் தான் ஒழுக்கம் வரும், நல்ல பொறியாளர்கள் உருவாகுவார்கள் என மடத்தனமாய் நினைக்கும் எல்லா கல்லூரி நிர்வாகத்திர்க்கும் தான் !

கல்வி என்பது தன்னையும் நெறிப்படுத்தி தன்னுடன் இருப்பவர்களையும் நெறிப்படுத்த தூண்டுவது தான் . ஆனால் இங்கு கல்வி என்ற பெயருக்கே அர்த்தம் வேறாய் உள்ளதே ! இத்தைகைய நிலையில் தன்னுடைய நான்கு வருட கனவை கருவை போல் சுமந்து செல்லும் குழந்தையை ஒரு நல்ல பொறியாளனாய் இந்த உலகிற்கு தர அந்த கல்லூரி கடமைப்பட்டிருக்கிறது .


ஆனால் இங்கு நடப்பதோ வேறு ! பதினெட்டு வயதிற்கு மேல் நிரம்பிய, சொந்தமாய் முடிவு எடுக்கும் திறன் கொண்ட மாணவர்களை பெரும்பாலும் விதிமுறைகள் , ஒழுக்கம் , கட்டுப்பாடு , கல்வி என்ற பெயரில் ஒரு மன உளைச்சல் தரும் சூழ்நிலையில் உட்படுத்தி கிட்டத்தட்ட தினமும் எட்டு மணி நேரம் அவர்களை சித்ரவதை   செய்கிறார்கள் !


சரி அப்படி செய்வதால் தான் நமக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு பத்தாயிரம் ஜி.டி நாயுடு கிடைப்பார்கள் என்றால் சரி ! ஆனால் அதுவும் நடக்கவில்லையே ! இங்கே வெறும் அவர்களை ஒரு புத்தகப்புழுவாகவும்  அடிமையாகவும் மட்டுமே நடத்துகிறார்கள். நான்  எல்லோரையும் குறை சொல்லவில்லை. இதுவே தமிழ்நாட்டில் நடக்கும் பெருபான்மை ! இதை தவிர்த்து ஆங்காங்கே சில விதி விளக்குகள் இருக்கின்றன. இத்தகைய விதிமுறைகளை பார்க்கும் பொழுது சுதந்திரத்தை தவறாய் பயன்படுத்தினால் தண்டிக்கும் நிலை போய் , சுதந்திரத்தை அனுபவித்தாலே தண்டனை என கொள்ளப்படுகிறது.

இது, சம்மந்தப்பட்ட மாணவனை மட்டும் பாதிக்காமல் அவனை சார்ந்து இருக்கும் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிறது . அவர்களுக்கு விதிமுறைகளே வேண்டாம் என்று சொல்லவில்லை . பட்டாம்பூச்சி போல் சிறகடித்து விண்ணில் பறக்கும் அவர்களை அழுத்தி பிடித்து கொன்று விடாமல் இலகுவாய் பிடித்து வாழ்கையின் பாடங்களை அந்த நான்கு வருடத்தில் பயிற்றுவித்து உலகிற்கோர் அப்துல்கலாமை வழங்க வேண்டுமென வேண்டுகிறேன் .                  

THE YOUTH ARE NOT USELESS, THEY ARE USED LESS

விதிமுறைகள் ( நியாமாக இருக்கும் பட்சதில் ) அவற்றை மாணவர் சமுதாயமே ஏற்றுக்கொள்ளும் . ஆக விதிமுறைகளை தாண்டி மாணவர்களுக்கு அறிவை வளர்க்கும் பொருட்டு என்ன செய்யலாம் என கல்லூரி நிர்வாகம் மனதிலிருந்து  யோசித்தாலே போதும், தமிழ்நாடு சுபிட்சம் பெரும்.


பணம் மற்றும் புத்தக அறிவை தாண்டி மனிதநேயத்துடன் ஒரு பெருபான்மையான செய்முறை விளக்கம் கொண்ட பொறியியல் என்று கற்றுத்தரப்படுகிறதோ அன்று வருடத்திற்கு பல ஜி.டி நாயுடுகள் அப்துல் கலாம்கள் உருவாகுவார்கள். இளைஞர்கள் சக்தியில் முன்னனியில் திகழும் இந்தியா போன்றொரு நாட்டில், தமிழகத்தில் இருக்கும் மாணவர்களை சரியாக வழிநடத்தாத ஒரு கல்லூரி நிர்வாகமோ அல்லது ஒரு ஆசிரியரோ இருக்கும் வரை ஒரு நல்ல பொறியாளன் உருவாக முடியாது , ஒரு நல்ல பொறியாளன் உருவாகவில்லை என்றால் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி உருவாக முடியாது . ஆக அத்தகைய கல்லூரி இருந்தும் வீண் என்பதை வருத்ததோடு பதிவு செய்துகொள்கிறேன் !

    
Share on Google Plus

About Chennai Memes

A perfect blend of entertainment and information at your disposal... all just a click away at s . We troll everything..and we mean EVERYTHING. So if your humour quotient is hinged at the "I am offended by this" mark, then this page is not meant for you :)

0 comments:

Post a Comment