இப்பவே கண்ண கட்டுதே | சென்னை மீம்ஸ்

   
 “சென்னை “ இந்த பெயரை கேட்டதும் ஒவ்வொருவருக்கும், ஒருவித பரிமாணத்தில் அனுமானமும் அனுபவங்களும் நிறைந்து இருக்கும் . முதல் முறையாக திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை போல, எங்கோ ஒரு உதவாத பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு, பட்டதாரி என கல்யாண பத்திரிக்கையில் மட்டுமே போட தகுதியான அந்த பட்டத்தை, சென்னை பக்கம் பறக்க விட்டு வேலை தேடலாம் என்ற ஒரு முற்போக்கு யோசனையில், சென்னையின் கூட்ட நெரிசலை அதிகமாக்க ஒருவனாய் உள்ளே நுழைந்தவர்களில் நானும் ஒருவன் ! 


அறிமுகம் இல்லாத எனக்கு, முகவரி கொடுக்கும் இந்த சென்னை என்று, வழக்கம் போல் சினிமாவில் சென்னையை காட்டுவது போல் சென்ட்ரலில் இருந்து  ஒரு வாரம் தோய்க்காத காலுறைகளும், இன்றோ நாளையோ என ஒட்டி ஊஞ்சலாடி கொண்டிருக்கும் ஒரு பேக்கும் காலை ஏழு மணிக்கு வந்து இறங்கின . அவைகள் என்னை அடைக்கலமாய் பயன்படுத்த ஆரம்பித்து வெகுகாலம் ஆகின்றது . 

கிண்டி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும் என வேலை கிடைக்காத என் சீனியர் ஒருவரின் அறிவுரைப்படி இறங்கிய நான், ஒரு கணம் திகைத்துவிட்டேன் .  அங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் தனக்கான வாழ்க்கையை  தேடி ஓடி கொண்டிருந்தார்கள் . ஒவ்வொருவர் கண்ணிலும் ஒரு வித சந்தோஷம், சோகம், இயலாமை, கோபம் , வருத்தம் என பல தரப்பட்ட உணர்வுகள்

இருப்பினும் அங்கே சாதாரணமாக கீழே கிடக்கும் பிளாஸ்டிக் கப்பை ஓரமாக போடுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லையா என்று நான் நினைத்த கொண்டிருந்த போது தான், எனக்கான நேரம் ஓடிகொண்டிருந்தது தெரிந்தது. இதனால் தான் அதை யாரும் செய்யவில்லை என புரிந்து கொண்டு பார்க் ஸ்டேஷனை நோக்கி  நடக்க ஆரம்பித்தது தான் தாமதம், ஒரு துப்பாக்கி ஏந்திய போலிஸ் என்னை முரட்டு பார்வையோடு பின் தொடர்ந்தார்.

இதயத்துடிப்பு ஒரு கணம் உசேன் போல்ட்டை முந்தியடித்து ஓடியது. மெதுவாக திரும்பினேன்.

“ ஏ துமாரா பர்ஸ் ஹே ?? “ என்று வினவி ஒரு நைந்து போன பர்சை நீட்டினார் .

அது என்னுடையது தான் . எங்கேயாவது தவறி தொலைத்திருப்பேன். அவரிடம் அசடு வழிந்து பர்சை வாங்கி கொண்டு “ நன்றி ஹை ! “ என தப்பான ஹிந்தியில் உளறினேன். இந்த பதட்டத்தின் இடையில் பார்க்கில் ட்ரைன் பிடிக்க வேண்டும் என்பதை ஒரு நிமிடம் என் மூளை மின்னலை போல் வெட்டியது. சந்தித்த முதல் நபரே, அதுவும் வேற்று மாநிலத்தவரே இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என எண்ணி நடந்து கொண்டே செல்கையில் திரும்பி அவரை பார்த்த பொழுது “ நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... நான் தான் மயங்குறேன் “ என என் மனநிலைக்கு ஒத்துபோகும் படி ஒருவரின் கைப்பேசி ஒலித்தது. 

நடந்து கொண்டே பர்சை திறந்து பார்த்தவன் , அதில் வெறும் சினிமா டிக்கெட்டும், பணத்தை தவிர சில தேவை இல்லாத பொருட்கள் மட்டும் இருப்பதை நினைத்து   ஆச்சிரியப்படவில்லை. ஏனென்றால் செலவுக்கான பணத்தை உஷாராக பேன்ட்டின் உள்பாக்கட்டில் சொருகி வைத்திருந்தேன் . என் மனம் “ ராஜ தந்திரங்கள் அனைத்தையும்  கரைத்து குடித்திருக்கிறாயடா “ என பெருமை பீற்றுவதற்குள்  பார்க் ஸ்டேஷனுக்கு வந்திருந்தேன்.



சப்வேவில் சப்வே சர்பர்ஸ் பையன் போல அனைவரும் பேக்கை மாட்டிகொண்டு வேகமாக ஓடிக்கொண்டிருக்க, அதன் ஓரங்களில் பிச்சைகார்களும் பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்கள் விற்பவரும் தனது பணிகளை கவனித்து கொண்டிருந்தனர். தமிழ் பாரம்பரியத்தை பறை சற்றும் விதமாக குனிந்த தலை நிமிராமல் சென்ற சென்னை வாழ் தமிழச்சிகளை உற்றுபார்த்த பொழுது தான் புரிந்தது, அவர்கள் ஸ்மார்ட் போனை பார்த்து தடவியபடி செல்கிறார்கள் என்று ! தினமும் அப்படி பயிற்சி எடுத்தால் மட்டுமே போனையும் பார்த்து கொண்டு நேரே வழியையும் ஒரு கணம் பார்த்து அதே சமயம் யாரையும் இடிக்காமல் செல்லும் கலையை கற்றுக்கொள்ள முடியும் .

டிக்கெட் எடுத்துவிட்டு அங்கே அதை நான் பார்த்து கொண்டிருந்த சமயம் , சுனாமி வந்தது போல் தீடீரென ஒரு கும்பல் என்னை வேகமாக இடித்து கொண்டு முன்னேறி சென்றது. போர்க்கால அடிப்படியில் ராணுவம் ஆயுத்தம் செய்ய பயிற்சியா என யோசித்த போது அதற்க்கான விடை, தாம்பரம் செல்லும் ட்ரைனாக நின்று கொண்டிருந்தது. அட , நாமும் அதில் தானே செல்ல வேண்டும் என்று யோசிப்பதற்குள் வண்டி நகர ஆரம்பிக்க, வேகமாக நான் ஏற முயற்சி செய்ய வெளியில் இருந்து இரண்டு கைகள் என்னை தூக்கி மேலே விட்டன. இதுவல்லவோ மனிதநேயம் என்று பெருமைப்படுவதற்குள் என் சட்டையை நாராக கசக்கி உள்ளே இடித்து தள்ளி விட்டனர் !
ஆசையாய் உடுத்தியிருந்த சட்டை , என்னை ஆபாசமாய் திட்டியது .மேலே இருந்த கம்பியை பிடித்து அட்டை போல் ஒட்டிக்கொண்டு சுற்றி பார்த்தேன் . ஆனாலும் சென்னைவாசிகள் கலைநயம் மிக்கவர்கள். ” மோகன் லவ்ஸ் ப்ரியா , கொளத்தூர் கைஸ் “  என சங்க கால மன்னர்களுக்கே சவால் விடும் வகையில் தன்னுடைய கைவண்ணத்தை செதுக்கி காட்டி இருக்கிறார்கள். ஆக... தாம்பரம் செல்லும் வண்டிகள் யாவும் ஒரு நடமாடும் மகாபலிபுரம் !

கிண்டி ஸ்டேஷன் வந்ததும், கூட்டத்தின் பிடியிலிருந்து அவர்களின் கால்கள் வழியாக வெளியே வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. தப்பித்து வந்தவனை சுட்டெரிக்கும் வெயில் சூரிய நமஸ்க்காரம் செய்து வரவேற்றது .சுரங்கபாதை வழியாக வெளியில் வந்து பேருந்து நிலையம் செல்ல, கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக ஷேர் ஆட்டோக்கார்கள் வலிந்து வந்தனர் . இந்த ஜிபிஸிலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு கம்பனியை தேடி சிந்துபாத்தாய் செல்லும் என் கதை, கன்னித்தீவு போல முற்று பெறாமல் விதியின் வசம் முட்டி கொண்டிருந்தது.
ஒரு வழியாக சுற்றி இருந்த எல்லோரிடமும் கம்பனி அட்ரஸ்ஸை விசாரித்து சைனா உங்களை வரவேற்கிறது என்ற தூரத்தில் கம்பனியை தேடி அடைந்தபோது வந்த மகிழ்ச்சி , அந்த கம்பனி வாட்ச்மேன் என்னை தடுத்ததும் ஒரு கணம் நின்றுவிட்டது. அவரிடம் நான் நேர்முக தேர்வுக்காக வந்திருக்கிறேன் என ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்க , அவர் என்னுடைய ரெஸ்யுமேவை வாங்கி கொண்டு , கம்பனியிலிருந்து அழைப்பு வரும் என கேட்டை விட்டு தள்ளாத குறையாக வெளியில் அனுப்பினார்.
“ என்னடா இது பாண்டிய நாட்டு மன்னனுக்கு வந்த சோதனை ? “ இது என்று மனம் குமறினாலும் துக்கம் தொண்டையை அடைத்து தூக்கி அடிப்பதற்குள் வெளியே வந்துவிட்டேன். என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் ரயில் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்த போது,  .துப்பட்டாவில் முகத்தை சுற்றி  மேனியழகை க்ளைமேட்டுக்கு ஏற்றார் போல் காத்து வந்த சென்னை வாழ் மைந்தர்களும் தமிழச்சிகளும் ஹெல்மெட்டுக்கு மாறி அவஸ்தைப்பட்டு கொண்டிருந்தனர். பேருந்துகள் புகைப்பிடித்துக்கொண்டு நத்தை போல் நகர்ந்தன. ஷேர் ஆட்டோவிலும் புட்போர்ட் அடித்துக்கொண்டு சென்றனர்.

சிக்னலில் ட்ராபிக் போலிஸ் சிலர் செய்யும் லீலைகளை பார்த்து அடுத்த ஜென்மத்திலாவது ட்ராபிக் போலிசாக பிறக்க வேண்டும் என மனதில் அசைபோடும் வேளை , வயிற்றுக்கும், வாய்க்கும் அசைபோட மூளை உத்தரவிட்டது. நேராக ஒரு ஹோட்டலில் சாப்பிட முடிவு செய்து மெனு கார்டை பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டேன் . சென்னையின் ஓட்டல்களில் சாப்பிட குறைந்த பட்ச தகுதி வீட்டில் ஒரு கிராம் தங்கமாவது இருக்க வேண்டும் . வெளியே வந்து ஒரு கரும்பு ஜூசை குடித்துவிட்டு மீண்டும் நடையை கட்ட ஆரம்பித்தேன் .
வெயில் மண்டையை பிளக்க., ஒரு வழியாக மெரீனா கடற்கரைக்கு செல்லலாம் என ரயில் ஏறினேன் .சென்னைக்கு இதற்கு முன்னரே ஓரிரு முறை வந்திருப்பதால் சில இடங்கள் எனக்கு மிகவும் பரிச்சயம். சூப்பர் சிங்கரை விட சூப்பராக ஒரு கண் தெரியாத தாத்தா ரயிலின் உள்ளே பாட்டு பாடி கொண்டிருந்தார். அங்காங்கே சில காதல், அரசியல் , குடும்பம் ,வாழ்க்கை என எல்லாவற்றையும் உள்வங்கிக்கொண்டிருந்தேன் . மறுபுறம் ஒரு சிறுமி கையில் குழந்தையோடு தன் பங்கிற்கு பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் .
“ இதெல்லாம் தவறு ... நான் உன்னை படிக்க வைக்கிறேன் “ என மனம் கூறினாலும் , நானும் அவர்களும் கிட்ட தட்ட ஒன்றே ... அவர்கள் காசுக்காக பிச்சை எடுக்கிறார்கள் ,நான் வேலைக்காக பிச்சை எடுக்கிறேன் என பல மன ஓட்டங்கள் ஓடி கொண்டிருந்த போது என்னையும் அறியாமல் என்னுடைய சுய எள்ளலுக்கு புன்னகைத்து கொண்டேன். மாமா வீடு குரோம்பேட்டையில் தான் இருக்கிறது . இருக்கிற வேதனையில் அங்கு சென்றால் அறிவுரை என்ற பெயரில் என்னை சமாதியாக்கி விடுவார்கள் என்ற சிந்தனையில் கடற்கைரையை வந்து அடைந்தேன்.
அடடடா.... ஆச்சிரிய குறி நீண்டு கொண்டே செல்கிறது . சென்னையின் மொத்த அழகும் மாலை வேலை கடற்கையில் தான் மையில் கொண்டது போலும் . அப்துல்கலாம் ஐயா அவர்களின் வார்த்தைகேற்ப பல இளைஞர்களும் யுவதிகளும் துப்பட்டாவின் போர்வைக்குள்ளே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். சிலர் வீட்டிலிருந்தே குடை மற்றும் மதிய உணவு எடுத்து வந்து குடும்பம் நடத்துகிறார்கள். காலார நடந்து மணலில் அமர்ந்தேன். சிங்கார சென்னை செல்பி சென்னையாக உருமாறியிருந்தது  கடற்கரையில் குளிக்கும் பெண்களை வக்கிரமாக படம் பிடித்த ஒருவனை பேட்ரோலிடம் பிடித்து கொடுத்த அந்த நொடி மற்ற கவலைகளை மறக்க செய்தது

வானத்தின் பருவநிலை மாற தொடங்கிருந்த நேரம், பி.பி.ஓ.வில் பணிபுரியும் வருணபகவான் தன் ஷிப்ட் வந்ததும் மேகத்துக்கு கரியை பூசி வேலையை ஆரம்பித்தார் .நானோ சுண்டல் விற்கும் பையனிடம் சண்டை போட்டு இரண்டு ருபாய் குறைத்து சுண்டல் வாங்கி வெளியே நடந்தபடி இருந்தேன். இதமான காற்று கன்னத்தை வருடி கொண்டு சென்றது . நான் மட்டும் கவிஞனாய் இருந்தால் காதலிக்கு இந்த தென்றல் மூலம் தூது விட்டுருப்பேன். ஆனால் அங்கேயும் ஒரு டோல்கேட் போட்டு கட்டணம் வசூலித்தால் என்ன செய்வது என்றறியாமல் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் மாமா வீட்டிற்கு செல்ல ரயில் ஏறிய நேரம் சரியாக மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.
சில நேரங்களில் ஏதாவது கிறுக்கும் பொருட்டு நான் என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை உள் வாங்கிக்கொள்வேன். அந்த வகையில் சென்னையை பொறுத்த வரை கலாச்சார மாற்றதில் சிக்கி சீரழிந்தாலும் அங்காங்கே மனித நேயம் சிட்டு குருவி போல் பறந்து கொண்டு தான் இருக்க செய்கின்றன . அவைகளும் ஒரு நாள் மறைந்து விடும் அபாயம் என் கண்ணில் தெரிந்தது . சென்னையை பொருத்தமட்டில் டாக்டர் சீட் கூட இலவசமாய் தருவார்கள் ஆனால் பேருந்திலும் ரயிலிலும் ஜன்னலோர இருக்கையை விட்டு தரமாட்டார்கள்.
இருப்பினும் நின்று கொண்டே பயணிப்பது எனக்கு பிடித்திருந்தது. என்னை விட்டு நகர்ந்து கொண்டே செல்கின்ற மரங்கள் வீடுகள் , மோதி தெறிக்கும் மழைத்துளிகள் , செல்லமாய் அம்மாவிடம் சிணுங்கும் குழந்தையின் குரலொலிகள், கனவுகள் சுமந்து திரிகின்ற பலரின் விழிகள் என அந்த மொத்த பரிமாணமும் என்னை ஈர்த்து இழுத்துக்கொண்டு செல்கிறது. பரப்பர என ஓடும் உலகில் என்னையும் ஒரு அங்கமாய் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என இதயம் பதைபதைத்து , மனது சுமந்து செல்லும் வலிகளை அன்றைய தினத்தில் அந்த சூழலில் இறக்கி வைக்க அங்கே முன்பின் தெரியாதவர்களோடு நடக்கும் பரிவர்த்தனைகளின் மூலம் ஒரு நிறைவான தீர்வு உள்ளுக்குள்ளே ஏற்படுகிறது. இந்த ஒரு நிமிடம் போதும் ...என் வாழ்க்கையின் அத்தியாயத்தை புதிதாய் பிறந்து தொடக்க. வேண்டுகின்றேன் அடுத்த ஜென்மத்தில் சென்னையில் ஒருவனாய் பிறக்க !   

#ஓட்டேரிநரி             


Share on Google Plus

About Chennai Memes

A perfect blend of entertainment and information at your disposal... all just a click away at s . We troll everything..and we mean EVERYTHING. So if your humour quotient is hinged at the "I am offended by this" mark, then this page is not meant for you :)

0 comments:

Post a Comment